சென்னை: குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதற்காக தொடங்கப்பட்டுள்ள இணையப் பக்கத்தில் பொதுமக்களும் பெயர்களை பரிந்துரை செய்து பங்களிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்கள், அதற்கான பொருள் விளக்கம் அடங்கிய தனி இணையப் பக்கம், தமிழ் இணைய கல்விக் கழகத்தால் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, www.tamildigitallibrary.tn/tamilnames என்ற பிரத்யேக இணையப் பக்கத்தை தமிழ் இணைய கல்விக் கழகம் உருவாக்கியுள்ளது. இதை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 14-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும். நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், “பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்” என்று மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன். அதற்கான பெயர்களை, அதன் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியுள்ளோம். தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.