தமிழகம்

“மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் பேராபத்து” - சீமான்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘மேகேதாட்டு அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டப்பேரவை தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது.

இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.

கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச் சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகேதாட்டு அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம்.

தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகேதாட்டு அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது.

காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல்.

உண்மை இவ்வாறிருக்க, மேகேதாட்டுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.

ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT