சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைய உள்ள இடம்.படம்: பி.ஜோதி ராமலிங்கம்

 
தமிழகம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம்: 25 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்த வீட்டு வசதி வாரியம்

செய்திப்பிரிவு

சென்னை: முதல்​வர் விஜய் அறி​வித்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்​டினப்​பாக்​கம் ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் உள்ள 25 ஏக்​கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

சென்னை தலை​மைச் செயல​கம் கடும் இட நெருக்​கடி​யில் இருப்​ப​தால், தலை​மைச் செயல​கம் மற்​றும் சட்​டப்​பேர​வையை வேறு இடத்​துக்கு மாற்ற நீண்ட கால​மாக முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன.

ராணுவத்​துக்கு சொந்​த​மான புனித ஜார்ஜ் கோட்​டை​யில்தான் தற்​போது தலை​மைச் செயல​கம் மற்​றும் சட்​டப்​பேரவை இயங்கி வரு​கின்றன. அங்கு தலை​மைச் செயல​கத்தை விரி​வாக்​கம் செய்ய இந்​திய தொல்​லியல் துறை அனு​மதி அளிப்​ப​தில்​லை. இதனால் இன்​றும் கடும் இடநெருக்​கடி​யில் தலை​மைச் செயல​கம் இயங்கி வரு​கிறது.

இந்​நிலை​யில் முதல்​வர் விஜய் கடந்த செப்​.4-ம் தேதி 110 விதி​யின் கீழ் ரூ.1,200 கோடி​யில் 20 லட்​சம் சதுர அடி பரப்​பில் ஒருங்​கிணைந்த புதிய தலை​மைச் செயல​கம் மற்​றும் சட்​டப்​பேரவை வளாகம் அமைக்​கப்​படும் என்று அறி​வித்​திருந்​தார்.

இதனைத் தொடர்ந்​து, அரசு சார்​பில் சென்னை பட்​டினப்​பாக்​கம் கடற்​கரையை ஒட்​டி​யுள்ள அரசுக்கு சொந்​த​மான ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் புதிய சட்​டப்​பேரவை மற்​றும் தலை​மைச் செயலக வளாகம் அமைக்க அரசு முடிவு செய்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இத்​திட்​டத்தை தொடங்​கு​வதற்​கான பணி​களை தமிழக அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யம் இத்​திட்​டத்​துக்கு தனது 25.16 ஏக்​கர் நிலத்தை வழங்​க​வும், சென்னை மாநக​ராட்​சி, அதன் சுமார் 1 ஏக்​கர் நிலத்தை வழங்​க​வும் இசைவு தெரி​வித்​துள்​ளன. இத்​திட்​டத்​துக்​கான நிர்​வாக ஒப்​புதலை விரை​வில் அரசு வழங்க உள்​ளது.

இந்த புதிய தலை​மைச் செயலக வளாகம் 15 தளத்​தில் சுமார் 20 லட்​சம் சதுரடி கட்​டு​மான பரப்​பள​வில் கட்​டப்பட உள்​ளது. இந்த இடத்​தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி.

அரசு சார்​பில் முதலில் பட்டினப்பாக்கம், கிண்​டி​யில் உள்ள நெடுஞ்​சாலை ஆராய்ச்சி நிலை​யம் மற்​றும் நந்​தம்​பாக்​கம் ஃபின்​டெக் சிட்டி அரு​கிலுள்ள இடம் ஆகிய 3 இடங்​கள் பரிசீலிக்​கப்​பட்​டது. இதில் 25 ஏக்​கர் நிலம் கிடைப்​ப​தால் பட்டினப்பாக்கம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த இடத்​துக்கு அருகே முதல்​வர் விஜய்​யின் இல்​லம் இருப்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்த நிலம் அரசு குடி​யிருப்​பு​கள் அமைப்​ப​தற்​காக 1958-ம் ஆண்டு கையகப்​படுத்​தப்​பட்​டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT