சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதத்தின் விலை, தரத்துக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பெரிய மற்றும் நடுத்தர கோயில்களில், பக்தர்களுக்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் என, பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இக்கோயில்களில், ஒப்பந்ததாரர்கள் மூலம் பிரசாத கடைகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதில் பிரசாதங்கள் தரமற்று இருப்பதாகவும், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில், இனி கோயில்கள் மூலமே நேரடியாகப் பிரசாதங்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை அறநிலையத்துறை ஆணையர் வினய் வழங்கி உத்தரவிட்டுள்ளார். தற்போது கோயில்களிலேயே பிரசாதங்களைத் தயாரித்து விற்பனை செய்ய சட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, பிரசாதங்களின் தயாரிப்புச் செலவு மற்றும் விற்பனை விலையை அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 50 கிராம் லட்டு தயாரிப்புச் செலவு ரூ.13 ஆகவும், அதன் விற்பனை விலை ரூ.20 ஆகவும், 50 கிராம் தேன்குழல் தயாரிப்பு செலவு ரூ.19 ஆகவும், விற்பனை விலை ரூ.25 ஆகவும், 50 கிராம் அதிரசம் தயாரிப்பு செலவு ரூ.13 ஆகவும், விற்பனை விலை ரூ.20 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர முறுக்கு, மிளகு வடை, புளியோதரை, சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், அப்பம் மற்றும் தேன் திணைமாவு, அரவணை ஆகிய பிரசாதங்களுக்கும் தயாரிப்பு மற்றும் விற்பனை விலைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
பிரசாதங்களின் சுவையும் தரமும் மாறாமல் இருக்க, ஆவின் நெய் மற்றும் கூட்டுறவு அங்காடிகளின் பொருட்களையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரசாத பாக்கெட்டுகளில் கோயில் முகவரி, பொருளின் தரம், எடை, விலை மற்றும் தயாரிப்பு தேதி ஆகியவை கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிய கோயில்களில் சமையலறை கட்டமைப்பைப் பராமரிப்பது மற்றும் தயாரிப்பு அளவுகளை நிர்வகிப்பது குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பிரசாதச் செலவு விவரங்களை முறையாகத் தயாரித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.