கோப்புப் படம்
சென்னை: கிராம சபைக் கூட்டங்களை மதம் சார்ந்த கட்டிடங்கள் அல்லது வளாகத்தில் நடத்தக் கூடாது என்று ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் வி.அமுதவல்லி ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: உள்ளாட்சி தினமான நவ.1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கூட்டங்களை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்களின் வருகையை உறுதிசெய்ய வேண்டும். மக்கள் பங்கேற்கும் வகையில், கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்களை அந்தந்த ஊராட்சி அமைப்பினர் தங்கள் பகுதி மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, கிராம சபைக் கூட்டங்களை எந்தவொரு மதம் சார்ந்த வளாகங்களில் நடத்தக் கூடாது. தொடர்ந்து, கிராம சபைக்
கூட்ட நிகழ்வுகளை ‘நம்ம கிராம சபை’ செயலியில் பதிவேற்றம் செய்து, அதுகுறித்த அறிக்கையை நவ.1-ம் தேதியே இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த முறை கூட்டத்தின் விவாதங்கள் மற்றும் நிகழ்வுகளை காணொலியாக பதிவு செய்து சபாசார் வலைத்தளத்தில் பதிவேற்றினால், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் தானாகவே அறிக்கை தயாராகிவிடும். இந்த வசதியை ஊராட்சிகள் பயன்படுத்த வேண்டும்.
சாதிப்பெயர்களை அடையாளமாகக் கொண்டுள்ள ஊர்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பாக கிராம சபையில் விவாதித்து ஒப்புதல் பெற வேண்டும். தங்கள் கிராமம் அல்லது வார்டில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், மணல் மூட்டைகளை தயார்நிலையில் வைத்தல், குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பது, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும்.
அதேபோல், தகுதியானவருக்கு மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்ட உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும் மண்பாண்டங்கள், பனைப் பொருட்கள் உள்ளிட்ட தொழில்களை ஊக்குவிக்க கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும்.