சென்னை: அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய ‘உயர்கல்வி தேர்வு வாரியம்’ என்ற புதிய தேர்வு வாரியத்தை உருவாக்க திட்டமிடப்பட்டிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை நேற்று தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது: உயர் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகிறோம்.
வெளிநாடுகளில் மாணவர்கள் கல்வி பயிலும்போது பகுதிநேரமாக வேலைபார்ப்பது வழக்கம். அதுபோன்று கல்லூரியில் படிக்கும்போதே பகுதிநேர வேலைவாய்ப்பு முறையை கொண்டுவரலாமா? என திட்டமிட்டு வருகிறோம்.
இதன்மூலம் மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட செலவினங்களுக்கு பெற்றோரைச் சார்ந்திருக்க வேண்டியதிருக்காது. தங்களின் அன்றாட செலவினங்களுக்கான பணத்தை தாங்களே சம்பாதித்துக்கொள்ள முடியும்.
அதேநேரம் மேற்படிப்பையும் தொடரலாம். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு பள்ளி ஆசிரியர்களை மட்டுமின்றி உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு கல்லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரை யாளர்கள் ஆகியோரையும் தேர்வு செய்கிறது.
அவ்வாறு இல்லாமல் உயர்கல்வித் துறைக்கென ‘உயர்கல்வி தேர்வு வாரியம்’ (Higher Education Recruitment Board-HERB) என்ற புதிய தேர்வு வாரியத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஜெர்மனி, ஜப்பான் மொழிகளைக் கற்பதற்கான மொழி ஆய்வகங்களை ஏற்படுத்த அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்களின் நீண்ட நாள் கோரிக் கையான பணி மேம்பாட்டு திட்டத்தை, அவர்களுக்கு கடந்த செப்.1-ம் தேதி முதல் நடை முறைப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஏறத்தாழ 8,500 பேர் பயன் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தொழில் நிறுவனங்களுடன் விரைவில் ஒப்பந்தம்
உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசும்போது, ‘‘தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
நமது மாணவர்களுக்கு இந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதுதொடர்பாக தொழில்துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘டிரிப்பிள் இ' (Education-Employment-Entrepreneurship-EEE)- என்ற ஒரு முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புக்கும், அவர்களை தொழில்முனைவோர் ஆக்கவும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்’’ என்றார்.