திருச்சி: இலங்கை அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்குவதால் வரும் நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: மலேசியா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடைப்பட்ட மலாகா ஜலசந்தியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து வங்கக் கடலில் புயலாக மாறும் என்று வானிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அதேநேரத்தில், மலாகா ஜலசந்தி தாழ்வு பெரிய அளவுக்கு தீவிரம் அடையாமல், அதே இடத்தில் நீடிக்கவே அனைத்து வானிலை காரணிகளும் சாதகமாக உள்ளன. எனவே, தெற்கு அந்தமான் வழியாக எதிர்பார்க்கும் காற்றழுத்த தாழ்வுநிலை இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. மாறாக, குமரிக்கடலை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது இலங்கை அருகே நீடிக்கிறது.
இது இன்று அல்லது நாளை (நவ.24, 25) தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். இதன் காரணமாக, தமிழகத்தில் பெய்துவரும் மழை இன்றும், நாளையும் சற்று தீவிரமடையும். மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான மழைப்பொழிவை கொடுக்கும். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலோரம் மற்றும் தென் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று (நவ 24) சென்னை உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை இருக்கும். இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு வரும் 27-க்குப் பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் கரைக்கு நெருக்கமாக நகர்ந்து, 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை, திருவள்ளூர் வரை இடைவிடாது அதிக மழைப்பொழிவை கொடுக்கும்.
அதேநேரத்தில், வட உள்மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழையும், பிற மாவட்டங்களில் அதிக மழையும் பெய்யும். நாகை முதல் திருவள்ளூர் வரை மழைப் பாதிப்பு ஏற்படலாம். இலங்கையைக் கடந்து தமிழகத்தின் வட கடலோரம் வரை புயல் பாதிப்பு இல்லாத மழை தரும் நிகழ்வாக இது இருக்கும்.
மழை பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.