கோப்புப் படம்
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மற்றும் கவனஈர்ப்பு தீர்மானம் முடிந்த பின்னர் பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘அமைச்சர்கள் தங்கள் பதிலுரையின் இறுதியில் புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
நேரம் கடந்து விடுவதால் பல்வேறு முக்கிய திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைவதில்லை. மேலும், அறிவிப்புகளை இறுதியில் வாசிப்பதால், அதுகுறித்து உறுப்பினர்கள் விவாதிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, அமைச்சர்கள் தங்கள் முன்னுரையை தொடங்கும் முன்பே, புதிய அறிவிப்புகளை வாசித்துவிட வேண்டும்’’ என்றார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
முன்னாள் முதல்வர் பழனிசாமி (அதிமுக): அமைச்சரின் பதிலுரைக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடுவதே வழக்கம். அதற்கு மாறாக அறிவிப்பை முன்பே வெளியிட்டு விட்டால் ஊடகங்களில் அதற்குதான் முக்கியத்துவம் இருக்கும். அமைச்சரின் பதில் வராது.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு (திமுக): அறிவிப்புகளை முதலில் வாசித்துவிட்டால், அதன்பிறகு உறுப்பினர்கள் அவையில் பேசுவது சுவாரஸ்யமாக இருக்காது. ஒரு படத்துக்கு போகிறோம் எனில், அதன் கிளைமாக்ஸ் காட்சி கடைசியில்தான் இருக்கும். தியேட்டருக்குப் போன உடனே கிளைமாக்ஸ் காட்சியைக் காட்டிவிட்டு, அதன்பின் படத்தை பார்த்தால் சரியாகஇருக்குமா? எனவே, பழையநடைமுறைப்படி இறுதியிலேயே அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: படம் நன்றாக இருந்தால் மக்கள் உண்மையாகவே கிளைமாக்ஸ் வரை தியேட்டரில் அமர்ந்து பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், 'நமது படம் எப்படியும் ஓடாது, நன்றாக இருக்காது, அதனால் முதலிலேயே கிளைமாக்ஸை போட்டுவிடுவோம்' என்று கூறுவதுபோல் உள்ளது.
அமைச்சர் வன்னியரசு: இப்போது படங்களில் 2 கிளைமாக்ஸ் இருக்கிறது. எப்போதும் மாற்றத்தை விரும்ப வேண்டும். ஆனால், நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்பவில்லை. நடைமுறை மாற்றத்தையும் விரும்பவில்லை. இது எப்படி சரியாக இருக்கும்?
திமுக கொறாடா எ.வ.வேலு: அமைச்சர்கள் முன்னுரையின்போது இல்லாமல், பதிலுரையை பேசத் தொடங்கும்போது அறிவிப்புகளை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும்.
பேரவைத்தலைவர் பிரபாகர்: முதலிலேயே அறிவிப்புகள் வெளியானால் அதுபற்றியும் உறுப்பினர்கள் விவாதிக்க முடியும். அறிவிப்பை இறுதியில் வாசித்தால் விவாதிக்க வாய்ப்பே கிடைக்காது. எனவே, அமைச்சர்கள் அறிவிப்புகளை முதலிலேயே வெளியிடும் புதிய நடைமுறையே இனி தொடரும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.