சென்னை: திருச்சிக்கு புதிய காவல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 3 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, உள்துறைச் செயலர் ஏ.கார்த்திக் நேற்று பிறப்பித்த உத்தரவு: சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜி-யாகப் பொறுப்பு வகித்து வந்த சந்தோஷ் குமார், சென்னை நந்தனத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிவில் சப்ளை சிஐடி) ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஐஜி-யாகப் பணியாற்றி வந்த ரூபேஷ் குமார் மீனா, திருச்சி மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த என்.காமினி, காவல் துறையின் நிர்வாகப் பிரிவு ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறையின் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த ஏ.ராதிகாவுக்கு புதிய பணியிடம் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பெண் ஐஜி விடுவிப்பு
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக இருந்தவரும் தற்போது நிர்வாகப்பிரிவு ஐஜி-யாக இருந்தவருமான ராதிகாவிடமும் சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் விசாரணை நடத்தி இருந்தனர்.
அவரை நிர்வாகப்பிரிவு ஐஜி பொறுப்பிலிருந்து நேற்று விடுவித்து உத்தரவு வெளியானது. வீரமணி மீது புகார் வந்த போது ஐஜி ராதிகா 5 மாதங்களுக்கும் மேலாக நீண்ட விடுப்பில் இருந்தார். இதனால், அவர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு சந்தேகம் வரவில்லை. இருப்பினும், வழக்கு விசாரணையில் எந்த இடையூறும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.