சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று சந்தித்து, அரசு ஊழியர்களுக்கு "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)" அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், டி. ரவீந்திரன் ஆகியோர் தமிழக முதல்வரை இன்று (13.1.2026) நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கால்நூற்றாண்டு கோரிக்கையான ஓய்வூதிய பிரச்சனைக்கு தீர்வு கண்டது குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
அதேசமயம், சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் மிகக்குறைந்த ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கணக்கிட்டு உரிய பலன்களை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
அதேபோன்று, 2021ம் ஆண்டு மின்வாரியத்தில் கேங்மேனாக பணியில் இணைந்தவர்களுக்கு கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்திட வேண்டும், மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசி சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும், கல்லூரி பேராசிரியர்களின் பணி மேம்பாட்டு ஊக்குவிப்பு ஊதியம் வழங்கப்படாமலிருக்கும் பகுதியினருக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதேபோன்று, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4000/- வழங்கப்பட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கேரள மாநில அரசாங்கம் போன்று கேப்பக்ஸ் திட்டமாக செயல்படுத்த வேண்டும், சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
அனைத்துக் கோரிக்கைகளையும் கவனமாக கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், நிதித்துறைச் செயலாளர் டி. உதயச்சந்திரன், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்கள் பி. உமாநாத், எம்.எஸ். சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.