முதல்வர் விஜய்யுடன் குமரவேல்
செங்கல்பட்டு: தமிழக வெற்றிக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் நியமனம் செங்கல்பட்டு மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் புதிதாகப் பதவி பெற்றவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ள நிலையில், மறுபுறம் ஏற்கெனவே கட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் பதவி மாற்றம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளராக தையூர் எஸ். குமரவேல் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான மரகதம் குமரவேலுக்கு மாவட்ட அமைப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மாவட்டச் செயலாளராக இருந்த தினகரன் மாற்றப்பட்டுள்ளார்.
இதுபோல், செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த குமார் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ ஜெ. காமாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். குமார் மற்றும் காமாட்சி இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், இந்த மாற்றம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், புதிய பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக விரைவில் பிரம்மாண்டமான வெற்றி விழா நடத்தவும் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், செங்கல்பட்டு கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு ஆதரவான உற்சாகம் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், நீண்ட காலமாக மன்றத்திலும், கட்சியிலும் பணியாற்றியவர்களை மாற்றிவிட்டு, புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, “கட்சிக்காக களத்தில் நின்றவர்களுக்கு அங்கீகாரம் எங்கே? புதிதாக வந்தவர்களுக்கு மட்டும் முக்கியப் பதவிகளா?” என்ற கேள்வி அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாக தெரிகிறது.
கணவன்–மனைவிக்கு முக்கியப் பொறுப்பு
மரகதம் குமரவேல், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், அவருக்கும் அவரது கணவருக்கும் ஒரே நேரத்தில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இதனை அவர்களது ஆதரவாளர்கள் வரவேற்று கொண்டாடி வரும் நிலையில், எதிர்தரப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வெறும் நிர்வாக மாற்றமாக மட்டும் பார்க்கப்படாமல், தவெகவின் செங்கல்பட்டு மாவட்ட அரசியலில் புதிய அதிகார மையம் உருவாகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
புதிய பொறுப்பாளர்களின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்துக்குத் தயாராகி வரும் நிலையில், பழைய நிர்வாகிகளின் அதிருப்தியை தலைமை எவ்வாறு கையாளப் போகிறது என்பதே தற்போது செங்கல்பட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.