தமிழகம்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

செய்திப்பிரிவு

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, நவ.1-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று (அக்.29) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் - நிகோபார் தீவுப் பகுதிகளில் இன்று (அக்.30) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையக்கூடும். இது மேலும் மேற்கு, வடமேற்காக நகர்ந்து, 31-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தெற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவ.1-ம் தேதி பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 2-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களிலும், 3-ம் தேதி நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT