பாம்பனில் ஏற்றப்பட்டுள்ள ஒன்றாம் எண் புயல் கூண்டு.
ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேசுவரம் அருகே பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.
மேலும், அடுத்த 3 நாட்களுக்கு மியான்மர் கடற்கரையோரமாக வடக்கு - வடமேற்கு திசையில், வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பங்களாதேஷ் கடற்கரைகளை நோக்கி தொடர்ந்து நகரும், என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ராமேசுவரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறும் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டது.