சரண்ராஜ்
சென்னை: துணை நடிகர் சரண்ராஜ் கடந்த 2023-ம் ஆண்டு வடபழனி ஆற்காடு சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் காரை ஓட்டி வந்த சாலிகிராமத்தைச் சேர்ந்த மற்றொரு துணை நடிகரான பழனியப்பன் மற்றும் அவரது நண்பரான துரைராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தனது மகனை கொலை செய்துள்ளனர் எனக்கூறி சரண்ராஜின் தாயார் மாரியம்மாள் சென்னை 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் பாபா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் புதிய விசாரணை அதிகாரியாக, உதவி ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் புதிதாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டுமெனக் கோரப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.18-க்கு தள்ளி வைத்து அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.