கோப்புப் படம்
சென்னை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.யின்) மேம்படுத்தப்பட்ட இணையதளம் புதிய சிறப்பம்சங்களுடன் விரைவில் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் அதன் செயலியில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்கின்றனர். ஆனால், தட்கல் முன்பதிவின்போது, அடிக்கடி ‘சர்வர்’ பிரச்சினை ஏற்படுகிறது. இதுதவிர, தொழில்நுட்ப கோளாறுகளால், டிக்கெட் முன்பதிவின்போது, பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழுவின் உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியபோது, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இணையதளம் மேம்படுத்தப்பட்டு தயாராக உள்ளது. டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும் தடையின்றியும் செய்வதை நோக்கமாகக் கொண்டு, நான்கு முக்கிய மேம்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்யும் போது தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல், தேவையற்ற பாப்-அப்களை அகற்றுதல், மற்றும் ஒளிரும் கிராபிக்ஸ், கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்படும்.
அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் இருப்பு விவரத்தை ஒரே பார்வையில் பார்க்கலாம். அதேபோல், டிக்கெட் பதிவு செய்ய வேண்டிய முறைகளை எளிமைப்படுத்தி இருப்பது, பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.