சென்னை: பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு நேரில் செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் புகார் அளித்து, உடனடியாக மின்னணு சிஎஸ்ஆர் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று டிஜிபி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.
தமிழக காவல் துறையின் புதிய மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR) வசதியை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் டிஜிபி அலுவலகத்தில் இன்று காலை தொடங்கி வைத்து, இத்திட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக காவல் துறை இணையதளம் மூலம் பொதுமக்கள் ஏற்கெனவே புகார் அளிக்கும் வசதி இருந்து வருகிறது.
ஆனால், புகாருக்கான சிஎஸ்ஆர் நகலைப் (புகார் அளித்ததற்கான ஒப்புகை) பெறுவதற்கு காவல் நிலையத்துக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
பொதுமக்களின் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் தற்போது இ-சிஎஸ்ஆர் (e-CSR) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது புகார்களை இணையதளம் வழியாக பதிவு செய்யலாம்.
இதற்காக தமிழ்நாடு காவல்துறை இணையதளமான https://www.police.tn.gov.in என்ற முகவரிக்குச் சென்று, அதில் உள்ள 'Register Complaint / e-CSR' என்ற வசதியைத் தேர்வு செய்து புகாரை பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவு செய்தவுடன், அது தானாகவே இ-சிஎஸ்ஆர் ஆக பதிவு செய்யப்பட்டு, தனித்துவமான இ-சிஎஸ்ஆர் எண்ணுடன் கூடிய ஒப்புகை குறுஞ்செய்தி மூலம் உடனடியாக புகார்தாரரின் செல்போனுக்கு அனுப்பப்படும்.
அதன்பிறகு, அந்தப் புகார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்படும். எந்த காவல் நிலையம் என்று புகார்தாரர் குறிப்பிடவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டு, உரிய காவல் நிலையத்திற்கு மாற்றப்படும். மேலும், புகார் அளித்தவருக்கு 3 நாட்களுக்குள் மற்றொரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில், தேவையான ஆதார ஆவணங்களுடன் செல்ல வேண்டிய காவல் நிலையத்தின் பெயர் தெரிவிக்கப்படும்.
புகார் தொடர்பாக விசாரணை நடத்திய பிறகு, அதன் தன்மைக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, சிஎஸ்ஆர் பதிவு செய்வது, முதற்கட்ட விசாரணை நடத்துவது, வழக்குப்பதிவு செய்வது அல்லது உரிய காரணங்களுடன் புகாரை முடித்து வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களை பொதுமக்கள் காவல்துறை இணையதளத்தில் உள்ள சிட்டிசன் போர்டல் (Citizen Portal) பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்படும். இந்த புதிய வசதியின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு குடிமகனும் காவல்துறையை எளிதில் அணுக வழிவகுப்பதாகும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரும் முறையாக பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், புகார்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.
இதற்காக தனி கண்காணிப்பு டேஷ்போர்டு (Dashboard) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-சிஎஸ்ஆர் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை உயர் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். யார் மீதேனும் பொய் புகார் அளிக்க நினைத்தால், காவல் நிலைய விசாரணையில் தெரிந்து விடும். மேலும், பொய் புகார் அளித்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இ-சிஎஸ்ஆர் வசதி என்பது அவசரகால உதவிக்கானது அல்ல. அவசரநிலையில் இருப்பவர்கள் உடனடியாக காவல்துறையின் 100 அல்லது 112 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அவசர உதவி தேவைப்படும் பெண்கள் 1091 என்ற மகளிர் உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்” என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில குற்ற ஆவணக் காப்பக டிஜிபி சஞ்சய் மாத்தூர், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.