சென்னை: மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 16-ம் தேதி மாலை புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த ‘அக்வான்’ என்ற பெயர் சூட்டப்படுகிறது. தீயசக்தி அல்லது அரக்கன் என்பது ‘அக்வான்’ என்பதன் பொருளாகும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று காலை (நவ.13) 05.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14-ம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15-ம் தேதி காலை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும். இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16-ஆம் தேதி மாலை புயலாக வலுப்பெறக் கூடும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (நவ.13) மற்றும் நாளை (நவ.14) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவ.15-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவ.16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவ.17 மற்றும் 18-ம் தேதிகளில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவ.19-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நவ.13-ல் அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவ.14-ல் தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவ.15-ல் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் இதர தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவ.16-ல் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இதர தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவ.17-ல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இதர மத்திய வங்கக்கடல் பகுதிகள் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.