பிரதிநிதித்துவப் படம்

 
தமிழகம்

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் புதிதாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி தோற்றுவிப்பு

சிறப்பு கல்வித் தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியீடு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் புதிதாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பதவிக்கான சிறப்பு கல்வித் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: மாவட்ட நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது. இந்த பதவி நேரடி நியமன முறை வாயிலாகவும், பணிமாற்றல் முறையிலும் நிரப்பப்படும்.

மாவட்ட முதன்மை நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதி பணிநியமன அதிகாரியாக இருப்பார். தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு கல்வித் தகுதி பிஎஸ்சி கம்ப்யூட்டர் அல்லது பிசிஏ பட்டப்படிப்பு ஆகும்.

மேலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் டிப்ளமா பெற்றுள்ள பிஏ, பிஎஸ்சி, பிகாம் பட்டதாரிகளும் இதற்கு தகுதியுடையவர் ஆவர். அடிப்படை கல்வித் தகுதியான பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியது அவசியம் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.20,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பதவியானது டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும். டிஎன்பிஎஸ்சியின் 2026 வருடாந்திர தேர்வு கால அட்டணைவியின்படி, ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத்தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு தேர்வு அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT