காஞ்சிபுரம் நகருக்குக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்க உள்ள இடத்தின் தீர்ப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதரவாக வந்ததைத் தொடர்ந்து அறிவிப்பு பலகை வைத்த மாவட்ட நிர்வாகம்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் அவசர அவசரமாகத் தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பொன்னேரிக்கரை பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மாநகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளது.
தீர்ப்பு வெளியான கையோடு, சம்பந்தப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதைக் குறிக்கும் பெயர் பலகையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுவி, முதல்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் காஞ்சிபுரம் நகருக்குள் நுழையாமலேயே நேரடியாக வந்து செல்ல முடியும்.
இதன்மூலம் சென்னை, வேலூர், பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் பயண நேரம் கணிசமாகக் குறையும். மேலும், பொன்னேரிக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புதிய வர்த்தக மையமாக உருவெடுத்து, நகரின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கெ.ரா.திவ்யஸ்ரீயிடம் கேட்டபோது, "நீதிமன்றத் தீர்ப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு சாதகமாக வந்துள்ளது. பேருந்து நிலையம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன" என்றார்.