தமிழகம்

உடன்குடியில் 3,200 மெகாவாட் திறனில் புதிய விரிவாக்க மின் நிலையங்கள்: மின் வாரியம் ஒப்புதல்

செய்திப்பிரிவு

சென்னை: உடன்குடியில் 3,200 மெகாவாட் திறனில் புதிய விரிவாக்க மின் நிலையங்கள் அமைப்பதற்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு உடன்குடியில் 660 மெகாவாட் திறனில், இரு அலகுகள் (1,320 மெகாவாட்) கொண்ட அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதல் அலகில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது. 2வது அலகில் இந்தாண்டு இறுதிக்குள் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த மின் நிலையத்தின் அருகில் 660 மெகாவாட் திறனில் இரு அலகுகள் கொண்ட ‘உடன்குடி–2’ மற்றும் ‘உடன்குடி–3’ ஆகிய மின் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தலா 660 மெகாவாட் அலகுகளுக்குப் பதிலாக, தலா 800 மெகாவாட் திறனில் நான்கு அலகுகள் என, மொத்தம் 3,200 மெகாவாட் திறனில் புதிய விரிவாக்க மின் நிலையங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் நடந்த மின்வாரிய இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இப்புதிய மின் திட்டங்கள் அனைத்தும் பொது – தனியார் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட ஆலோசகராக, தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் நியமிக்க உள்ளது. இந்நிறுவனம் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் ‘டெண்டர்’ ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்குடி மின் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமே, இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கடல்சார் உள்கட்டமைப்பு தான். கடற்கரையில் இருந்து 7 முதல் 8 கி.மீ தூரத்திற்கு கடலுக்குள் தனியாக அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி இறங்குதளம் மூலமாக கப்பல்களில் இருந்து நிலக்கரி நேரடியாக இறக்கப்படும். அங்கிருந்து மணிக்கு 2,000 டன் நிலக்கரியைக் கொண்டு சேர்க்கும் அதிநவீன கன்வேயர் பெல்ட் வழியாக மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த பிரத்யேக துறைமுக வசதி கொண்ட தமிழகத்தின் முதல் மின் திட்டம் உடன்குடி என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT