சென்னை: “மத்திய அரசும், சுற்றுச்சூழல் நிர்வாகமும், மேகேதாட்டு அணைக் கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது'' என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மேகேதாட்டு அணை விவகாரத்தில் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் கர்நாடாகாவில் மேகேதாட்டு அணை கட்ட யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதோடு கர்நாடகா தனது சொந்த இடத்தில் அணைக் கட்டிக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றமே அனுமதி அளித்துள்ளது என்று கூறியுள்ளது மிகவும் கண்டிக்கதக்கது.
கர்நாடகா மாநிலம் மேகேதாட்டுவில் அணைக் கட்டுவதை தனது கவுரவமாக கருதுகிறது. ஆனால் இது தமிழக டெல்டா விவசாயிகளுக்கு உயிர் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினை உணர்வோடு கலந்ததல்ல, உயிரோடு கலந்தது. மேகேதாட்டுவில் அணைக்கட்டினால் டெல்டா மண்டலம் பாலைவனம் ஆகிவிடும் சூழல் உள்ளது.
தன்னிச்சை அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் சொல்லிற்கே கட்டுப்படாத கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தையும் மதிக்காத வகையில் எதேச்சாதிகாரமாக செயல்படுவதும், பேசுவதும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கர்நாடாகவில் வாக்கு வங்கிக்காக அங்குள்ள அரசியல் கட்சிகள் மாறிமாறி வாக்குறுதிகளை அளித்து மக்களை கவரவே முயல்கின்றன. தமிகத்தில் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் அவதியுறும் விவசாயிகளைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்க வேண்டும். அதோடு கர்நாடக அரசு மேகேதாட்டு அணைக் கட்ட மத்திய அரசும், சுற்றுச் சூழல் நிர்வாகமும் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது. தமிழக விவசாயிகளுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில கர்ஙகிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.