தமிழகம்

நேபாள வெள்ளம்: மீட்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த 20 பேர் இன்று சென்னை திரும்புகின்றனர்

நாளை சொந்த ஊருக்கு பயணம்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய, கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற 57 பேரில் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்ட 20 இன்று இரவு சென்னை வந்து நாளை அவர்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்திரைக்கு புறப்பட்டனர். இவர்கள் காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கினர். இதில், ஒரு வாகனத்தில் பயணம் செய்த 20 பேர் பாதுகாப்பாக உயிர்தப்பினர். மற்ற 2 வாகனங்களில் சென்ற 37 பேர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதாக தகவல் வெளியானது.

இதில், கடலூரை சேர்ந்த திருமாவளவன் (62) நேற்று (ஆக.27) பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதையடுத்து, 57 பேரில் மொத்தம் 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர். மற்ற 36 பேரை தேடும் பணி 3-வது நாளாக நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 பேர் நேற்றிரவு காத்மாண்டுவில் தனியார் ஹோட்டலில் வந்து தங்கியுள்ளனர்.

அவர்களில் ஓசூரை சேர்ந்த ரகுநாதன் அங்கு தேடப்பட்டு வருபவரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பதால், அவரைத் தவிர மற்ற 20 பேர் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நாளை (ஆக.29) அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மேலும், தேடப்பட்டு வரும் 36 பேர் குறித்து காத்மாண்டுவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் உள்ள ராணுவ அதிகாரிகளின் செல்போனுக்கு, அவர்களது உறவினர்கள் நேரடியாக பேசி, தேடப்பட்டு வருபவர்களின் புகைப்படம், அடையாளங்கள் உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டும் என காத்மாண்டு ராணுவத்தினர் தெரிவித்ததால், யாத்திரா நிறுவனத்தினர் 36 பேரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் விஜய், மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையைக் கண்டறிந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், க.தென்னரசு, ர.வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் ரெ.சதீஸ் ஆகியோர் புதுடெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன், கும்பகோணத்தில் இருந்து சென்ற முகமது உசேன் ஆகியோர் இன்று காத்மாண்டுக்கு சென்று அங்கு மீட்புப் பணிகளை பார்வையிட உள்ளனர்.

எனினும், மீண்டும் காத்மாண்டு பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழகத்திலிருந்து சென்றுள்ள அமைச்சர்களுக்கு வெள்ளம் பாதித்த இடங்களுக்கு செல்ல இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்று மாயமானவர்களை தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தேப்பட்டு வரும் 36 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, யாத்ரா டிராவல்ஸ் உரிமையாளர் சையது சாதிக், “கைலாஷ் யாத்திரைக்கு 57 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுடன் நானும் சென்றேன். எனக்கு 70 வயதுக்கு மேல் ஆனதால் என்னை அனுமதிக்கவில்லை. அதனால் எனது மகன் சையது உமர் பாரூக் மற்றும் ஓசூரைச் சேர்ந்த ரகுநாதன் ஆகியோரை ஒருங்கிணைப்பாளராக அமைத்து 57 பேரை காத்மாண்டு வரை சென்று அனுப்பி வைத்துவிட்டு, கும்பகோணத்திற்கு வந்துவிட்டேன்.

ஆக.26-ம் தேதி காலை 9.30 மணியளவில் எனது மகன் என்னிடம் பேசினார். அதன் பிறகு 10.10-க்கு இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிந்தவுடன் நான், எனது மகனை தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 36 பேர் குறித்து எந்த தகவலும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை” என கண் கலங்கியபடி கூறினார்.

SCROLL FOR NEXT