புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்ட வீடு.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் ரெங்கம்மாள் சத்திரத்தில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வீடுகள் கட்டும் பணி முழுமை அடையாததால் மக்கள் வீதியில் குடியிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ரெங்கம்மாள்சத்திரம் மற்றும் கறம்பக்குடியில் நரிக்குறவர் (பழங்குடியினர்) இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்ட சில குடும்பத்தினருக்கு 2022-23-ல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தலா ரூ.2.10 லட்சத்தில் 107 வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.
ஆனால், 3 ஆண்டுகளைக் கடந்தும் வீடுகள் முழுமையாக கட்டப்படாமல், அனைத்து வீடுகளுமே பாதியில் நிற்கின்றன. இதனால், வீடுகளின்றி வீதியில் குடியிருக்கும் அவல நிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கறம்பக்குடி, ரெங்கம்மாள்சத்திரம் பகுதி நரிக்குறவர் இன மக்கள் கூறியது: கறம்பக்குடியில் 39 வீடுகளும், ரெங்கம்மாள்சத்திரத்தில் 68 வீடுகளும் தலா ரூ. 2.10 லட்சம் வீதத்தில் ஒரு அறை கொண்ட வீடாக கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டின் கட்டுமானப் பணியும் பாதியிலேயே நிற்கிறது.
இதனால், உடைமைகளை வீதியில் போட்டுவிட்டு அங்கேயே குடியிருந்து வருகிறோம். பனி, மழைக்காலத்தில் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். எனவே, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து வீடுகளையும் முழுமையாக கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து எம்எல்ஏ எம்.சின்னதுரை கூறியது: ரெங்கம்மாள் சத்திரத்தில் 20 வீடுகள் பாதிவரை சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. 20 வீடுகள் தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளன. 7 வீடுகளின் கட்டுமானப் பணியே தொடங்கவில்லை. மற்ற வீடுகளில் கதவு, ஜன்னல் பொருத்தவில்லை.
இதேபோல, கறம்பக்குடியிலும் உள்ளன. கறம்பக்குடியில் ஒப்பந்ததாரர் மூலமும், ரெங்கம்மாள்சத்திரத்தில் குடும்பத்தினர் மூலமும் கட்டுமானப் பணி தொடங்கியது. ஆனால், அலுவலர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் பாதியிலேயே முடங்கி உள்ளன. வீடுகள் விரைந்து கட்டிக் கொடுக்க வேண்டும்.
இப்பகுதி மக்களை அண்மையில் ஆட்சியரிடம் அழைத்துச் சென்று கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுமாறு வலியுறுத்தினேன். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். சிறிய அளவில் ஒரு அறையை மட்டும் கட்டிவிட்டு, அதுதான் உங்களுக்கான வீடு என்று குறிப்பிடுவது நரிக்குறவர் இன மக்களை, அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் பாரபட்சத்துடன் பார்ப்பதாக தெரிகிறது.
இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே, வருங்காலத்தில் இவர்களுக்கும் மற்றவர்களுக்கு கட்டுவதைப் போன்று கூடுதல் அறைகளுடன்கூடிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.