இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். தேர்வு அறைக்கு கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் எவை என்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தேர்வு மையத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. படம்: பிடிஐ
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். இதையொட்டி, பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் உள்ள பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. விண்ணப்பித்திருந்த 22.80 லட்சம் பேரில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
வினாத்தாள் கசிந்தது: இதற்கிடையே, நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப் பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நீட் மறுதேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 551 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், சிங்கப்பூர் உட்பட 14 நாடுகள் என சுமார் 5,500 மையங்களில்நடைபெறும் தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 307 தேர்வு மையங்களில் 1.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
ஏற்கெனவே வினாத்தாள் கசிந்துள்ளதால், மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்கள் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வினாத்தாள்களை கொண்டு செல்ல ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
தேர்வு மையங்களில் சிசிடிவி: அதேபோல, அனைத்து நீட் தேர்வு மையங்களையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை கண்காணிக்க ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நீட் மறுதேர்வு பணிகளில் 2 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
வழக்கமாக, நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும். நிர்வாக நடைமுறைகளால் மாணவர்களின் தேர்வு நேரம் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த முறை கூடுதலாக 15 நிமிடங்கள் தேர்வு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு மாணவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட உள்ளனர். ஆள்மாறாட்ட மோசடியைத் தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சோதனையும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகள், மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட், அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் அணிந்து வரவும், செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 மொழிகளில் தேர்வு: நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில், 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.