தமிழகம்

‘சவால்’ மிகுந்த ராஜபாளையம் தொகுதியில் ‘ராஜ்ஜியம்’ யாருக்கு?

வாக்குகளை பிரிக்கும் நாதக, தவெக, புதிய தமிழகம்

அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரின் தீவிரப் பிரச்சாரம் திமுகவுக்கு கடும் சவாலாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம் தொகுதியில் விவசாயமே பிரதானமாக உள்ளது.

மேலும் நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள், பேண்டேஜ் துணி, நைட்டி மற்றும் உள்ளாடை உற்பத்தியில் ராஜபாளையம் முன்னணியில் உள்ளது. முன்னாள் முதல்வரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பி.எஸ்.குமாரசாமி ராஜா ராஜ பாளையத்தை பூர்வீகமாக கொண்டவர்.

தொகுதியின் கோரிக்கைகள்:

ராஜபாளையம் பகுதியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, அரசு கலைக் கல்லூரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் ஆகியவை விவசாயி களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 6- வது மைல் நீர்த் தேக்கம் அருகே உருவாக்கப்பட்ட கூடுதல் நீர்த்தேக்கத்தை சீரமைத்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணி களை முடிக்க வேண்டும்.

ராஜபாளையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் விசைத்தறி கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது உள்ளிட்டவை மக்களின் பிரதான பிரச்சினையாக உள்ளது. ராஜபாளையம் தொகுதியில் ராஜபாளையம் நகராட்சி, செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சிகள் மற்றும் தளவாய் புரம், சொக்கநாதன்புத்தூர், தேவதானம் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன.

எஸ்.ஐ.ஆர்க்கு பின் ராஜபாளையம் தொகுதியில் 1,03,236 ஆண் வாக்காளர்கள், 1,08,951 பெண் வாக்காளர்கள் உட்பட 2,12,220 வாக்காளர்கள் உள்ளனர். 1962- ம் ஆண்டு உருவாக்கப் பட்ட ராஜபாளையம் தொகுதி யில் அதிமுக 5 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், சுயேச்சை ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜபாளையத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் கோபால்சாமியிடம் 21,432 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2016-ல் 4,800 வாக்குகள் வித்தியாசத்திலும், 2021-ல் 3,898 வாக்குகள் வித்தியாசத்திலும் தங்கபாண்டியன் வெற்றி பெற்றார்.

தற்போது தொடர்ந்து 4-வது முறையாக அவர் போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜெகதீஸ்வரி, சசிகலா அணி சார்பில் ஹரிஷ் உட்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் கூட்டணி பலம், கடந்த முறை செய்த பணிகள், நலத்திட்டங்களை விளக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆளுங்கட்சி, நகராட்சி நிர்வாகம் மீதான அதிருப்தி, தொடந்து 10 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக உள்ளதால் இருக்கும் அதிருப்தி இருந்தாலும் அவர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மக்களவை தேர் தலில் தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் ராஜபாளையம் தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் பெற்றார். தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளதால் நம்பிக்கையுடன் தனது மனைவிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவரது மகன், மகளும் தனித்தனியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி இந்த முறை புதுமுக வேட்பாளரான கார்த்திகேயனை களமிறக்கி உள்ளது. அவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இளம் வாக்காளர் மற்றும் பெண்களின் வாக்குகளை குறிவைக்கும் தவெக, சமுதாய வாக்குகளை குறி வைக்கும் புதிய தமிழகம் மற்றும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளால் வாக்குகள் பிரியும் நிலை உள்ளது. யாருக்கு வெற்றி என்பதை கணிப்பது கடினமாக உள்ளதுஎன அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT