கோவை: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரிக்கு, ரகசியத் தகவலை கசியவிட்டதாக இந்திய கடற்படை மாலுமி கோவையில் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி (31), இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார். கோவை ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ரானியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் கடந்த ஒரு வாரமாக தங்கி பிரதீப் முகர்ஜி பயிற்சி பெற்றார்.
இந்நிலையில், ஆந்திர காவல் துறையில் பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விசாரிக்கும் சிறப்பு உளவுப் பிரிவு போலீஸார் இருதினங்களுக்கு முன் கோவைக்கு வந்து இவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத் துறை அதிகாரிக்கு, இந்திய கடற்படையின் ரகசிய பாது காப்புத் தகவல்களை பிரதீப் முகர்ஜி கசிய விட்டிருப்பது சிறப்பு உளவு பிரிவினருக்கு முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் பாகிஸ்தானிய பெண் உளவாளியிடம், விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்துடன் தொடர்புடைய தகவல்களை பகிர்ந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஆந்திர சிறப்பு பிரிவு போலீஸார், பிரதீப் முகர்ஜிகுறித்த தகவல்களை தெரிவித்து கைது செய்ய இந்திய கடற்படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்.
தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்த சிறப்புக் குழு, பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர். அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.