தேசிய வாக்காளர் தின விழாவில் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டையை தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் நேற்று வழங்கினார். இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை: சென்னையில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலத் தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு, ஜன.25-ம் தேதி நிறுவப்பட்டது. இந்த ஆணையம் நிறுவப்பட்டு அதன் வைர விழாவை கொண்டாடிய 2011-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜன.25-ம் தேதி முதல் தேசியவாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் மாநில அளவிலான 16-வது தேசிய வாக்காளர் தினவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் உரைகாணொலி வாயிலாக ஒளிபரப்புசெய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள்பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு குடவோலை முறை இருந்துள்ளது. அத்தகைய சிறப்புமிக்க வரலாற்றைக் கொண்ட நாம் அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்துக்கு முக்கியமானது.
இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் முழக்கமாக "எனது இந்தியா, எனது வாக்கு" என்றுள்ளதை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி சிறந்த ஜனநாயகத்துக்கான நமது பங்களிப்பை செலுத்த வேண்டும். 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்ந்து, வாக்களிப்பது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் முதல்முறை மற்றும் புதிய வாக்காளர்களுக்கான புதிய வாக்காளர் அடையாள அட்டைகளையும் அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.
பின்னர், சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வுக்கான நடமாடும் வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் க.கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) நா.பூஷ்ணாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநில தேர்தல் ஆணையம்இதேபோல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில், தேசிய வாக்காளர் தினம் அதன் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தேர்தல் ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி பங்கேற்று, பல்வேறு போட்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர்பேசும்போது, "வாக்களிப்பது என்பது உரிமையாக மட்டுமல்ல, ஓர் உணர்வாகவும் அனைவராலும் உள்வாங்கப்பட வேண்டும்” என்றார். இதில் தேர்தல் ஆணைய செயலர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா, முதன்மை தேர்தல் அலுவலர் வெ.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.