சென்னை: தமிழகம் முழுவதும் தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பேசியதாவது:
அரசு பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பேருந்துகளின் நிகழ்நேர கண்காணிப்பை மேம்படுத்தவும், 13,490 அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மற்றும் அவசர உதவி பொத்தான்கள் ரூ.17.99 கோடி செலவில் பொருத்தப்படும்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பணிமனையில் இயங்கும் 40 பேருந்துகளில் எரிபொருள் சென்சார் மற்றும் டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு முன்னோடி திட்டமாக ரூ.16.34 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 7 ஆண்டுகள் பழமையான நல்ல நிலையில் உள்ள 100 டீசல் பேருந்துகள் மின்சார பேருந்துகளாக மாற்றப்பட்டு இயக்கப்படும். அதற்கு தேவையான மின்சாரக் கட்டமைப்பு வசதிகள் ரூ.13.60 கோடியில் ஏற்படுத்தப்படும்.
போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தலா 8 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 16 பேர் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, விருது வழங்கும் திட்டம் ரூ.10 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் பயணிகளின் எளிதான, விரைவான மற்றும் பாதுகாப்பான கட்டண பரிவர்த்தனை வசதியை ஏற்படுத்த, தற்போது சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் நடைமுறையில் உள்ள ‘சிங்கார சென்னை’ தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சென்னை மந்தைவெளியில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் நாமக்கல் பரமத்திவேலூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் கட்டப்படும் என்பன உள்ளிட்ட 16 அறிவிப்புகளை வெளியிட்டார்.