சென்னை: நாடு முழுவதும் உள்ள அனைத்துமருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) செயலர் மருத்துவர் ராகவ் லங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மருத்துவர்கள் மருந்து பரிந்துரைச் சீட்டுகளை தெளிவாக எழுதுவது தொடர்பான பாடத்தை மருத்துவ பாடத் திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
பாதுகாக்கப்பட வேண்டிய மருத்துவ ஆவணங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அந்த உத்தரவை கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவ ஆணையம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும், மருந்து சீட்டு நடைமுறைகளை கண்காணிக்க சிறப்பு துணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
அந்த குழுவானது, நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எழுத்துப் பூர்வமாக வழங்கும், மருந்து பரிந்துரைகள் தெளிவாக உள்ளதா என்பதை மதிப்பிடும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை குழு மேற்கொள்ள வேண்டும்.
துணைக் குழுவின் இந்த பணிகள் அனைத்தையும் ஆவணப் படுத்துவதுடன், அதனை தேசிய மருத்துவ ஆணையம் கேட்கும்போது சமர்ப்பிக்கும் வகையில், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பெரிய எழுத்துகளில் புரியும்படி மூலப் பெயருடன் (ஜெனரிக்) கூடிய மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது கட்டாயம் ஆகும்.