புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் கூட்டியுள்ளார். அதில் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழகம், அந்தமான் நிகோபார் ஆகிய பகுதிகளில் இருந்து முதல்வர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரியை பொறுத்தவரையில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனும் அழைக்கப்பட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கிய நோக்கம் மாநிலத்தின் வளர்ச்சி, கட்டமைப்புகள், நிதிப் பற்றாக்குறை, மருத்துவமனைகள், புதிதாக கட்டப்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமில்லாமல் சட்டம் - ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு போன்ற அம்சங்கள் பேசப்படும்.
புதுச்சேரி மாநில மக்களின் பிரதான கோரிக்கையாக இருப்பது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதுதான். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துதான் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் என்று பலமுறை பல அரசியல் கட்சிகளும், நான் முதல்வராக இருக்கும்போது மத்திய உள்துறை அமைச்சர், பிரதமரை சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டிருக்கிறோம். இதுபோன்ற கூட்டங்களிலும் பேசியிருக்கிறோம்.
முதல்வர் ரங்கசாமிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பேசுவதற்கான முக்கியமான இடம் தென்மாநில முதல்வர்கள் மாநாடு. ஆனால் எனக்கு கிடைத்த தகவலின்படி தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப்போகிறார். அதில் கலந்து கொள்வதற்கு அவருக்கு ஆர்வம் இல்லை என்று தெரிகிறது.
உண்மையிலேயே முதல்வர் ரங்கசாமிக்கு மாநில மக்கள் மீது அக்கறை இருந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த, அவர் இந்த தருணத்தை பயன்படுத்தி உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஆனால் அவர் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகமாக இருக்கிறது. துணை நிலை ஆளுநர் கலந்துகொண்டு பொதுவான பிரச்சினைகளை பேசுவார். மாநில பிரச்சினைகளை முன்வைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதல்வர் ரங்கசாமிதான் செய்ய வேண்டும். ரங்கசாமி முதல்வர் கடமையை செய்ய தவறிவிடுகிறார். கடந்த முறை நடந்த தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட அவர் புறக்கணித்திருக்கிறார். பிரதமர் அழைத்த முதல்வர்கள் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இப்படி தனக்கு கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் இழந்துவிட்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று இங்கிருந்தே கேட்டால் மத்திய அரசு வழங்காது. புதுச்சேரிக்கு நிதிநிலை அதிகமாக வருகிறது. மாநிலத்தை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பு இருக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றால் மிக வேகமாக திட்டங்கள் நிறைவேற்ற முடியும். அதற்கு மாநில அந்தஸ்துதான் பிரதான பிரச்சினையாக இருக்கிறது.
மாநில அந்தஸ்து கோரிக்கையை ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் வைத்துள்ளார். எனவே, தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இதில் அரசியல் கிடையாது. மாநில மக்களின் பிரச்சினை” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.