காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி, அவ்வப்போது ஆளும் அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்குவார். அதன்படி, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது அவர் அள்ளிப் போட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாராயணசாமி மீதே ஊழல் துப்பாக்கியை திருப்பி இருக்கிறது எதிர் தரப்பு.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த பரஸ்பர ஊழல் குற்றச் சாட்டுகள் புதுச்சேரி அரசியலை கலகலப்பாக்கி வருகிறது. குறிப்பாக, காங்கிரஸில் இருந்து பாஜக-வுக்கு ஜாகை மாறி தற்போது உள்துறைக்கு அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் சொத்துகளை வாங்கி குவித்து இருப்பதாக நாராயணசாமி அடிக்கடி அள்ளித் தூற்றுவார்
அப்படி அவர் அண்மையில் அள்ளிப் போட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த நமச்சிவாயம், “அனைத்து சொத்துகளையும் நான் நேர்மையான முறையில் வாங்கி இருக்கிறேன். இதற்கான வருமான வரிக் கணக்கையும் தாக்கல் செய்துள்ளேன். ஆனால் நாராயணசாமி, பாகூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை பினாமி பெயரில் வாங்கி வைத்திருக்கிறார். பல மாநிலங்களில் அவருக்கு சொத்துகள் இருக்கின்றன" என்று பொதுவெளியில் போட்டு உடைத்தார்.
இதற்கு பதில் சொன்ன நாராயணசாமி, “நான் ஊழல் செய்யவில்லை. எனது சொத்துகளை விற்றுத்தான் தற்போது செலவு செய்து வருகிறேன். என்னிடம் அப்படி எந்த பெரிய சொத்தும் கிடையாது. நமச்சிவாயத்திடம் இருக்கும் அனைத்து சொத்துகளையும் எனது பெயருக்கு மாற்றித் தர தயாராக இருந்தால், என்னிடம் உள்ள அனைத்து சொத்துகளையும் நமச்சிவாயத்துக்கு தரத் தயாராய் இருக்கிறேன். இதற்கு அவர் தயாரா?" என்று சவால் விடுத்துள்ளார்.
இதனிடையே புதுச்சேரி அரசியலுக்குள் புதிய வரவாக வந்திருக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸும், "நாராயணசாமி பல மாநிலங்களில் ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். நேரம் வரும்போது அதை எல்லாம் வெளியிடுவேன்" என்று தன் பங்குக்கு புழுதியைக் கிளப்பி இருக்கிறார். அசராமல் இதற்கும் பதில் கொடுத்த நாராயணசாமி, "நான், பல மாநிலங்களில் சொத்து வாங்கியிருப்பதாக ஜோஸ் சார்லஸ் கூறுகிறார். ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். எந்த மாநிலத்துக்கு வரச் சொன்னாலும் வந்து கையெழுத்துப் போடுகிறேன்.
என் பெயரில் அப்படிச் சொத்து ஏதேனும் இருந்தால் அவர் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம், ஜோஸ் சார்லஸும் அவரது சொத்துகளை எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். அவரது சொத்து விவரங்களும் அவர் மீதான வழக்கு விவரங்களும் என்னிடம் இருக்கின்றன. இதற்கு அவர் தயாரா?” என்றார்.
நெருப்பில்லாமல் புகையுமா... உங்கள் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறதே... சும்மாவா? என்று நாராயணசாமியைக் கேட்டால், "அட ஏங்க... இவர்கள் சொல்வது போல் நான் அப்படி எல்லாம் ஊழல் செய்து, சொத்து சேர்த்திருந்தால் இந்நேரம் மோடி என்னை விட்டுவைத்திருப்பாரா?" என லாஜிக்காக கேட்டுத் தாக்குகிறார். தேர்தல் சமயத்தில் இப்படி வந்து விழும் ஊழல் வாக்குமூலங்களை எல்லாம் புதுச்சேரி மக்கள் அலுப்புத் தட்டாமல் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.