புதுச்சேரி: தொகுதி பங்கீடு முடியாத சூழலில் கணபதி ஹோமத்துடன் தேர்தல் அலுவலகத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி திறந்தார். ஏற்கெனவே இத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுட்டிக்காட்டப்பட்டவர் மனுதாக்கல் செய்த நிலையில் நாராயணசாமி இத்தொகுதியில் போட்டியிடுகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
புதுவையில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு இன்னும் முடிவு அடையாமல் இழுபறியாக உள்ளது. தொகுதி எண்ணிக்கை, கூட்டணி தலைமை ஆகியவற்றில் இரு கட்சிகளும் விடாப்பிடியாக இருக்கின்றன. நாளை வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையிலும் இன்னும் கூட்டணி முடிவடையாமல் உள்ளது.
திமுக கடந்தமுறை போட்டியிட்ட சில தொகுதிகளில் காங்கிரஸும், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் திமுகவும் இந்த முறை போட்டியிட விரும்புகின்றன. இதுவும் தொகுதி பங்கீடு நிறைவடையாமல் இழுபறியில் இருக்க காரணம் ஆகும்.
நெல்லித்தோப்பில் கடந்த முறை திமுக போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிட தேர்தல் பணியை செய்து வந்தார். இச்சூழலில் அண்மையில் ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் திமுகவில் இணைந்தார். அவர் வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார். திமுகவில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது கூட்டணியே இழுபறியாக இருக்கும் நிலையில் இன்று காலை நெல்லித்தோப்பு கான்வென்ட் வீதியில் கட்சி தேர்தல் அலுவலகத்தை நாராயணசாமி திறந்துள்ளார். அதிகாலை 4.30 மணிக்கு கணபதி பூஜை செய்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருக்கு நெருக்கமானவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து காலை 9 மணிக்கு நெல்லித்தோப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் ஆலோசனையும் நடத்தினார். அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு நிறைவடையாத சூழலில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் அலுவலகம் திறந்தது என்பது, யார் இத்தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற கேள்வியை அதிகப்படுத்தியுள்ளது.