நாராயணன் திருப்பதி
தமிழகத்தில் திமுக மதவாத சிந்தனையை தூண்டிவிட்டு, மதங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக மாநில பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நேற்று ராமநாதபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அண்மைக் காலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதவாதப் போக்குடன் நடந்து கொள்கிறார். திமுக ஒரு மதவாதக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மதவாத சிந்தனையை தூண்டிவிட்டு, மதங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு மிகப் பெரிய சதித்திட்டத்தை தமிழகத்தில் வருகின்ற தேர்தலிலே அரங்கேற்றுவதற்கான முயற்சியை திமுக-வும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் செய்கிறார்களோ என்கின்ற ஐயம் நம்மிடத்திலே இருக்கிறது.
வேறு சில மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டுகின்ற முதலமைச்சர், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப் போய் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிக்கூடங்களில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.
இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழகம் தக்க பதிலடி தரும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறது. முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியினரும், நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் பெயரை எடுத்து விட்டார்கள் என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே மகாத்மா காந்தியை பற்றி மிக கொச்சையாக பேசியவர்கள் திராவிடக் கட்சியைச் சார்ந்தவர்கள் தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சவால் விடுகின்றோம். தமிழ்நாட்டில் கருணாநிதி, ஈ.வெ.ரா பெயர்களில் உள்ள திட்டங்களுக்கு எல்லாம் மகாத்மா காந்தியின் பெயரை வைக்கத் தயாரா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.