காவிமயமாக தமிழகம் வர கருணாநிதி விரும்பினார் என பாஜக மாநில தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன் திருப்பதி கூறியதாவது: தேர்தல் நெருங்க நெருங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம், என்பதை மறந்து தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு முதல்வராக எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதே அவருக்கு தெரியவில்லை.
திருச்சியில் முதல்வர் பேசும் போது, தமிழகத்தை எப்படியாவது காவிமயமாக்கி விட வேண்டும் என பாஜக துடிக்கிறது என்றும், கருப்பு, சிவப்பு கூட்டம் இருக்கும் வரை யார் அப்பன் வந்தாலும் அது நடக்காது என்றும் பேசியுள்ளார். ஒரு முதல்வர் பொதுவெளியில் பேசும்போது இப்படிப் பேசலாமா. இதன் மூலம் முதல்வரின் ‘லெவல்’ அவ்வளவு தான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் 1999-லேயே அவரது தந்தை கருணாநிதி தான், காவிமயமாக தமிழகம் வர வேண்டும் என்று விரும்பினார். அதற்குத் துணையும் நின்றார். கருப்பு சிவப்பு இருக்கும் வரை காவி உறுதியாக இருக்கும். அதேபோல், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நோய். அந்த நோயை பாஜக பரப்புகிறது என முதல்வர் சொல்லியிருக்கிறார். அப்படியானால், முதல்வர் ஸ்டாலினின் தந்தை இந்த நோயை பரப்பினாரா... நோய் பரப்புவதில் வல்லுநராக இருந்தாரா கருணாநிதி?
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சட்டப்பேரவையில் கருணாநிதி தெளிவாகப் பேசியிருக்கிறார். அப்படியென்றால், கருணாநிதியை மீறி முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறாரா? அப்படி செயல்படுவதற்கு இப்போது என்ன தேவை என்பது புரியவில்லை. திமுக - காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொடுத்த வரிப் பகிர்வை விட, நிதிப் பகிர்வை விட 4 முதல் 5 மடங்கு அதிகமாக தான் பாஜக அரசு வழங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.7.02 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.14 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். நாளொரு கொலையும் பொழுதொரு பாலியல் வன்முறைச் சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.