சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி தெரிவித்துள்ளனர்.
முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. வயது முதிர்வின் காரணமாக கடந்த பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் காலமானார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான நல்லகண்ணு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான நல்லக்கண்ணு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் நல்லகண்ணுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’
நடிகர் ரஜினிகாந்த்: ‘மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.’
சீமான் ( நாம் தமிழர் கட்சி): 'பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர். ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்.
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி. வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த பொதுவுடைமை பிதாமகன். பெருமதிப்பிற்குரிய நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிய சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்றபோது, ஐயா நம்மை விட்டு மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.’
விஜய் (தவெக): ‘சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி நல்லகண்ணு காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’
நயினார் நாகேந்திரன் (பாஜக): ‘மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் நல்லக்கண்ணு. அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்.’
அன்புமணி ராமதாஸ் (பாமக): ‘தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நல்லக்கண்ணு, தமது பள்ளிப் பருவத்திலேயே பொதுவுடைமை இயக்கம் குறித்த தகவல்களை பள்ளி ஆசிரியர் மூலம் அறிந்து கொண்டு, அந்த இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்கள் எவ்வாறு எளிமையாக வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.
அடித்தட்டு மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தமக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாதவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பிறகு பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபட்டதற்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.
தியாகத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்த அவர், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவராக திகழ்ந்தார்.’
பிரேமலதா ( தேமுதிக): ‘எளிமையும் நேர்மையும் கொண்ட அரசியல் வாழ்வால் மக்கள் மனதில் நிலைத்திருந்த பெருந்தலைவர் நல்லகண்ணு. சமூகநீதிக்காக, உழைப்பாளர் உரிமைக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்.’
டிடிவி.தினகரன் ( அமமுக): ‘பொதுவாழ்க்கையில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்திட்ட எளிமையின் சிகரம் நல்லகண்ணுவின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும்.’
கமல்ஹாசன் (மநீம): ‘தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.’