சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு உடல்நிலை குறித்து உறவினர்கள், மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்.
சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. கடந்த ஆக.22-ம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில்,அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இருந்த நுரையீரல் பிரச்சினையால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு சுவாசிக்க உதவியாக டிரக்யாஸ்டமி கருவியும், உணவுகொடுப்பதற்காக, வயிற்றுப் பகுதியில் குழாயும் பொருத்தப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடு திரும்பினாலும், அவ்வப்போது, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
நல்லகண்ணு தனது 101-வது பிறந்தநாளை கடந்த டிச.26-ம் தேதி கொண்டாடினார். அதன்பிறகு, வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு சிறுநீர் கழிப்பது குறையத் தொடங்கியதால், டிச.28-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்து, நல்லகண்ணுவின் உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து உறவினர்கள், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி, சேகர்பாபு உடன் இருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு வந்து, நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.