பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

சபரிவர்மன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தமிழினி

சென்னை: “முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட, மாற்றுத்திறனாளி சபரிவர்மன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் என்ற விசாரணைக் கைதியின் உடலில் 19 காயங்கள் இருப்பதாகவும், அவரின் கைகள் உடைக்கப்பட்டிருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல், கடும் அதிர்ச்சியளிப்பதோடு, வன்மையானக் கண்டனத்துக்குரியது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழகக் காவல் துறையினர், மனிதநேயத்தை இழந்த மூர்க்கர்களாக மாறி வருவது ஆபத்தானது. தவறு செய்தவர்களை, எவ்வித தனிமனித உரிமை மீறலும் இல்லாமல் விசாரிப்பது தான் காவல் துறையினரின் வேலையே தவிர, தங்கள் அதிகாரத்தையும், உடல் பலத்தையும், உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் பழைய கோபத்தையும் காட்டி, கைதிகளை பலியாக்குவது அல்ல.

குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமை நீதித்துறைக்கு மட்டுமே உண்டு என்பதை, தமிழகக் காவல் துறையினருக்கு தற்போதைய முதல்வர் விஜய் உணர்த்த வேண்டும். இல்லையேல் காவல் துறையின் மீது மக்கள் கொண்டுள்ள கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் காணாமல் போய்விடும்.

எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை பேரையும் முறையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட, மாற்றுத்திறனாளி சபரிவர்மன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT