நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

“நீங்கள் அங்காளி, பங்காளி என்றால் நாங்கள் மாமன், மச்சான்” - முதல்வருக்கு நயினார் விளக்கம்

செய்திப்பிரிவு

இஸ்லாமியர்களுடன் அங்காளிகள், பங்காளிகளாக பழகுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் இஸ்லாமியர்களுடன் மாமன், மச்சானாக பழகி வருகிறோம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தமிழக பாஜக சார்பில் சமபந்தி போஜனம் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தி.நகர் சட்டப்பேரவை தொகுதி பாஜக பொறுப்பாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: நான் முதல்வரை பல கோணங்களில் பார்த்திருக்கிறேன். என்னை பொருத்தவரை அவர் நல்ல மனிதர். ஆனால், அவரது ஆட்சியை என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. இஸ்லாமியர்களுடன் அங்காளிகள், பங்காளி களாக பழகுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் இஸ்லாமியர்களுடன் மாமன் மச்சானாக பழகி வருகிறோம்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதால், இஸ்லாமியர்களுக்கு எந்தவித வருத்தமோ, பிரச்சினையோ இல்லை. 2026 தேர்தலை மனதில் வைத்து தான் இஸ்லாமியர்களுடனான உறவை அங்காளி, பங்காளி என முதல்வர் ஸ்டாலின் உறவுமுறை கொண்டாடுகிறார். இது சண்டை சச்சரவுக்கும், வாக்கு வங்கிக்காகவும் பயன்டுத்தக்கூடிய வார்த்தையாக தான் இருக்கிறது.

தமிழகம் அயோத்தி போல மாறும் என கூறியது, பகல் கனவாக போய்விடும் என கனிமொழி, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்துள்ளனர். உண்மையில், அவர்களுக்கு தான் பகல் கனவாக அமைய போகிறது. திமுகவினர் கொடுத்திருந்த 525 வாக்குறுதிகளில், வெறும் 30 வாக்குறுதிகளை மட்டும் தான் நிறைவேற்றியிருப்பார்கள். எனவே, பிஹாரை போல, தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

திமுக 90 தொகுதிகளும், தவெக 70 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும், அதிமுக கூட்டணி 35 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெறும் என மத்திய உளவுத்துறை சர்வே வெளியிட்டதாக பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் குறித்து கேட்கிறீர்கள். இது ஒரு கருத்து கணிப்பா? யாரோ சர்வைவல்(பிழைப்பதற்காக) ஆவதற்காக போடப்பட்ட ஒரு சர்வே தான் அது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகமே போற்றும் தலைவரான மோடிக்கு கிடைக்காத சர்வே ரிப்போர்ட்டா இவர்களுக்கு கிடைத்து விட்டது.

திருவொற்றியூர் கோயிலில் விஐபி-க்கள் மட்டும் போகிறார்கள். நாங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறோம் என மக்கள் கேள்வி கேட்ட போது, அவர்களிடம் சேகர்பாபு பொறுமையாக பதில் அளித்திருக்க வேண்டும். பக்தர்களை, பெண்களை ஒருமையில் பேசியிருக்கிறார். அமித் ஷா, ஓபிஎஸ் சந்திப்பு குறித்து நான் கருத்து கூற முடியாது. இருந்தாலும், ஓபிஎஸ்-ன் எண்ணம் எதுவாக இருந்தாலும், அவரது நல்ல எண்ணம் ஈடேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT