சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தொடர்ந்தால் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் மொத்தமாக பாழாகிவிடும். எனவே, ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூன் மாத நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1,214 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உட்பட சுமார் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு சற்று கவனத்துடன் அணுக வேண்டும்.
ஏற்கெனவே, குடிநீர், கழிப்பறை, போதிய வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் முடங்கியுள்ள அரசுப் பள்ளிகளில், இந்த அளவுக்கான ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தொடர்ந்தால் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலம் மொத்தமாக பாழாகிவிடும்.
ஆசிரியர் பற்றாக்குறையை சமன் செய்ய கூடுதலான வகுப்புகளை கையாளும் பொறுப்பு, ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் தோள்கள் மீது சுமத்தப்படுவதால், அவர்களின் மனநலம், கல்வியின் தரம், மாணவர் - ஆசிரியர் இடையேயான நேரம் ஆகியவைகள் பாதிக்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கையில், இந்த காலியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்பதே நிதர்சனம்.
எனவே, தனது ஆஸ்தான நாயகனின் அருமை பெருமைகளை பரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், தனது துறையின் கீழ் இயங்கும் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.