நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்துவது எந்த வகையில் நியாயம்?” - நயினார் நாகேந்திரன்

செய்திப்பிரிவு

சென்னை: “மதம் சார்ந்து எந்த ஒரு ஒதுக்கீடும் இருக்கக் கூடாது என அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள நிலையில், இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்துவது எவ்வகையில் நியாயம்?” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அதனை பரிசீலிக்கும் முன் தவெக அரசு முதலில் இஸ்லாமியர் இடஒதுக்கீடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கெனவே இஸ்லாமியர்களுக்கு இருக்கும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டால், பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் சிலர் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கும் நிலையில், மேலும் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது, பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தை மொத்தமாகக் குறைத்துவிடும்.

மதம் சார்ந்து எந்த ஒரு ஒதுக்கீடும் இருக்கக் கூடாது என அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள நிலையில், இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது எவ்வகையில் நியாயம்?

எனவே, இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்துவதே முற்றிலும் தவறானது என்பதை தவெக அரசு உணரவேண்டும். பிளவுவாத அரசியலுக்கு அடிபணிந்து, தமிழக மக்களின் சமூக நீதியைச் சிதைக்கும் ஏதேனும் திட்டமிருந்தால் தவெக அரசு உடனடியாகக் கைவிடுவதோடு, அதனை பகிரங்கமான செய்தியாக வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT