நயினார் நாகேந்திரன்|கோப்புப் படம்

 
தமிழகம்

“விஜய் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற மாட்டார்” - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

செய்திப்பிரிவு

விஜய் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற மாட்டார், முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் காலை விடிந்ததும், மிகப்பெரிய பொய் ஒன்றை சொல்லி உள்ளார். 2021-ம் ஆண்டு சொன்ன, அதே பொய்யை மீண்டும் சொல்லி உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ கோடைகாலங்கள் வந்துள்ளது.

அப்போதெல்லாம் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், இவர்கள் இந்தத் தொகையை அறிவித்துள்ளனர்.

          

அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வராது. ஆனால் தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால், அடுத்த 2029 மக்களவைத் தேர்தலில் தான் முதல்வரை பார்க்க முடியும். மகளிருக்கு மாதம் யிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை, மத்திய அரசு முடக்குவதாக கூறுவது பொய். திமுக முற்றிலும் ஏமாற்று வேலையை செய்து வருகிறது. திமுக அரசின், மகளிருக்கு ரூ.5000 அறிவிப்பு என்பது, தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா போதை பொருளை மறைப்பதற்கு, சொத்து வரி அதிகரிப்பு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை மறைப்பதற்காகத்தான். ஆனால் தமிழக மக்கள் நிச்சயம் இதனை நம்ப மாட்டார்கள்.

கரூரில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தனர். இன்று சேலத்தில் நடந்த அதே கட்சியின், மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தவெக தலைவர் விஜய், முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அப்போதுதான் எல்லாம் நடக்கும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கங்கள் பற்றி நல்ல முறையில் பேச வேண்டும். அதற்கு முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.

களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர் விஜய். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? விஜய் தனக்கு 30 சதவீதம் வாக்கு இருக்கிறது என எப்படிக் கூறுகிறார்? விஜய் எல்லாம், எனக்கு ஒரு ஆளே கிடையாது. கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா இவருக்குக் கூடி விட்டது. நானும், அனுமன் போல், மலையை தூக்கிக் கொண்டு செல்ல முடியும் எனக் கூறலாம். ஆனால், அதைச் செய்ய முடியுமா? அதுபோல் விஜய்யால் ஒரு சீட் கூட வெற்றி பெறமுடியாது.

திமுக காங்கிரஸ் இடையே பிளவு என்று கூற முடியாது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள் என கேள்விப்பட்டேன். முதல்வர், ஆட்சியில் பங்கு தரமாட்டோம்; இது ஒத்து வராது என்று கூறியுள்ளார். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT