சென்னை: ‘தவெக ஆட்சியை கவிழ்க்க அதிமுகவும், பாஜகவும் சதி செய்வதாக அமைச்சர் நிர்மல் குமார் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப் பதிவில், “விலைவாசியால் மக்களை வதைக்கும் விதமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41-க்கு கொள்முதல் செய்ய முயற்சித்ததில் தொடங்கி, கைதிகள் தப்பியோடல் வரை, தொடர்ந்து தனது துறையில் நடக்கும் தவறுகளைத் தடுக்க வழி தெரியாமல், தற்போது தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவும் பாஜகவும் சதி செய்வதாக அடிப்படையே இல்லாத ஒரு அபாண்டமான பழியை அமைச்சர் நிர்மல் குமார் சுமத்தியுள்ளார்.
மக்கள் அளித்த தீர்ப்பை அவமதித்து, மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களை விலைபேசி வலை விரித்து இழுத்து, இடைத்தேர்தலில் மட்டுமே கண்ணாக இருக்கும் தவெக, தற்போது மற்ற கட்சியினர் தவெக எம்எல்ஏக்களை வாங்க முயற்சிப்பதாக சொல்வது ஆகச் சிறந்த நகைமுரண்.
நீங்கள் எத்தனை போலி புகார்களை அடுக்கினாலும், அழுது புலம்பினாலும், உங்களின் நிர்வாகத் திறனின்மையையும் தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் மறைக்க முடியாது.
எனவே, அடுத்தவரைப் பார்த்து வீணாக குறைசொல்லும் முன், முதலில் குதிரை பேரத்தை விடுத்து, குடிமக்களின் நலனில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.