தமிழகம்

“தவெக ஆட்சியின் தொடக்கத்திலேயே...” - அருணாச்சலம் குடும்பத்தினரை சந்தித்த நயினார் நாகேந்திரன் கருத்து

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: “முந்தைய ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டத்தில்தான் லாக்கப் மரணங்கள் நிகழ்ந்தன. ஆனால், தவெக ஆட்சியின் தொடக்கத்திலேயே நாகர்கோவில், தூத்துக்குடி என இத்தைய சம்பவங்கள் தொடங்கிவிட்டன” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்த இளைஞர் அருணாச்சலத்தின் வீட்டுக்கு, இன்று மதியம் நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “அருணாச்சலத்தை போலீஸார் அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் அவர் இறந்துள்ளார். அருணாச்சலத்தின் உதவியால்தான், இந்த குடும்பம் வாழ்ந்து வந்தது. தற்போது அவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன. சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்யும் போது கூட, பத்திரிகையாளர்களை போலீஸார் மிரட்டி உள்ளனர். இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடக்கின்றன.

காவல் துறையை கையில் வைத்து இருக்கிறார் முதல்வர் விஜய். அவர் நடித்த படத்தை அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். விசில் சின்னத்துக்கு வாக்களித்த பலனை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை, சிவகங்கையில் லாக்கப் கொலை ஆகியவை காரணமாக அப்போதைய ஆட்சிகள் மாறின.

அந்தந்த ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டத்தில்தான் இச்சம்பவங்கள் நடந்தன. ஆனால், இந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே, நாகர்கோவில், தூத்துக்குடி என லாக்கப் மரணங்கள் தொடங்கிவிட்டன. அந்த ஆட்சிகளுக்கும், தற்போதைய ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT