மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக, பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மதுராந்தகம்: தவெக வேட்பாளர்கள் குதிரை பேர ஊழலுக்கு காரணமானவர்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக பெயரைக்கூறி வெற்றி பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். 10 நாட்களில் ராஜினாமா செய்த அவர்கள் மீண்டும் தேர்தலில் வேறு கட்சியிலிருந்து போட்டியிடுகிறார்கள்.
அவர்கள் குதிரை பேரம் ஊழலுக்கு காரணமாகியுள்ளார்கள். நான்கு மாத ஆட்சியில் என்ன நடந்தது என்பது சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். அதனால், அதிமுக வேட்பாளர்களையே ஆதரிக்க வேண்டும்.
மேலும் தவெக தலைவர் விஜய்யை இந்தியாவின் வருங்கால பிரதமர் என பேசி வருகின்றனர். ஆனால், பிரதமர் பதவி என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக பெரிய வாய்ப்பை பதிவு செய்யும். நயினார் நாகேந்திரனை தொட்டுப் பாருங்கள் பின்னர் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் என்பது திட்டமிடாத செயல். அதிமுக வேட்பாளரை ஆதரியுங்கள், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.