நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
சென்னை: “என்டிஏ-வில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும். உதயநிதியை முதல்வராக்க திமுக இந்தத் தேர்தலை சந்திக்கிறது” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கூட்டணி பேச்சுவார்த்தை முன்பே முடிந்துவிட்டது. தற்போது இரு கட்சி தலைவர்கள் மட்டும் சந்தித்துள்ளனர். இபிஎஸ்-ஸின் டெல்லி பயணம் குறித்து அமித் ஷாவுக்கும், அண்ணன் இபிஎஸ்ஸுக்கும் மட்டுமே தெரியும். என்டிஏ-வில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்.
அனைத்து வகையிலும் தமிழகம் இன்று தாழ்ந்து போயுள்ளது. கையில் புத்தகத்தை பிடிக்க வேண்டிய மாணவர்கள் அனைவரும் கஞ்சாவை வைத்துள்ளனர். பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. 50% பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம்.
துணை முதல்வர் உதயநிதியை முதல்வராக்க வேண்டுமென அவர்கள் இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். அதிகார பலம், பண பலம் என அனைத்தையும் குவித்து எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறார்கள். அதைவிட மக்கள் பலம்தான் பெரியது என இந்த தேர்தல் நிருபிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.