நயினார் நாகேந்திரன்
சென்னை: ‘‘திரையுலகில் முடிசூடா மன்னராக இருக்கக்கூடிய ரஜினியை, ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளது வருந்தத்தக்கது, வேடிக்கையானது. ரஜினியின் ரசிகர்கள் நிச்சயம் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள். இதை, தவெக தலைவர் விஜய் கண்டிக்காதது ஏன்?’’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ கூட்டணி சார்பாக இபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. ஆனால் ஒன்று, இரண்டை தவிர வேறு எதையுமே நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிற வகையில், திசை திருப்பியது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களது குடும்பம் ஆள வேண்டும் என்பதற்காக பல்வேறு தவறான திட்டங்களை, தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அதோடு, துணை முதல்வர் உதயநிதியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதற்காக, பல அறிவிப்புகளை சொல்லி வருகின்றனர்.
தேர்தலையொட்டி, தற்போது மக்களுக்கு கோடை நிதி, பொங்களுக்கு நிதி உள்ளிட்டவற்றை அறிவித்து மக்களை திசை திருப்பி வருகிறார்கள். அதிகார பணம், பண பலத்தை மட்டும் வைத்து மீண்டும் ஆளும்கட்சியாகிவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது.
தமிழகத்தில் கஞ்சா, போதைப் புழக்கம் அதிகரித்துள்ளது. இவரின் ஆட்சியில், 1,977 கொலைகள் நடந்துள்ளன.குறிப்பாக, 361 குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 38 பெண் குழந்தைகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
எங்கள் கூட்டணிக்குள் தவெக வருவது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. திரையுலகில் முடிசூடா மன்னராக இருக்கக்கூடிய ரஜினியை, ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளது வருந்தத்தக்கது, வேடிக்கையானது. அவர் ஒரு ஆன்மிகவாதி. ரஜினியின் ரசிகர்கள் நிச்சயம் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள்.
இதை, தவெக தலைவர் விஜய் கண்டிக்காதது ஏன்? ஆதவ அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்விவகாரம் குறித்து முதன்முதலாக குரக் கொடுத்தது பாஜக தான். தொகுதி பங்கீடு குறித்து எங்களுக்குள் எந்தவித சிக்கலும் இல்லை. சுமூகமான முறையில் பேசி முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.