சென்னை: சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பில் இன்று தொடங்கும் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும், திமுக அரசுக்கு எதிராக கூட்டாக செயலாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23-ல் வெளியாகும் நிலையில், அதை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக வரும் 21-ம் தேதி முதல் திருவள்ளூர், செங்கை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார் மாநாட்டுக்கான கால்கோள் விழா மதுரையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை திரும்பிய நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது. மார்ச் 1-ம் தேதி பிரதமர் பங்கேற்கும் கூட்டணிக் கட்சிகள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பேரவை கூட்டத்தொடரில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து, திமுக அரசுக்கு எதிராக செயலாற்றுவது, வியூகங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புக்கு பிறகு, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், மரியாதை நிமித்தமாக பழனிசாமியை சந்தித்ததாக பதிவிட்டுள்ளார்.