நயினார் நாகேந்திரன்
சென்னை: மதுராந்தகம் தொகுதியில் தவெக கொடிகளை திணித்து பள்ளி மாணவர்களை தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்துவதாக முதல்வர் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில், “தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கும் “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கையை மதிக்காமல், மதுராந்தகம் தொகுதியில் பள்ளி மாணவர்களின் கைகளில் தவெக கொடிகளைத் திணித்து, இடைத் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் அவர்களை ஈடுபடுத்திய தவெக-வினரின் ஆணவம் கடும் கண்டனத்துக்குரியது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது “சாக்லேட் வேண்டும் என அடம் பிடிப்பது போல தவெகவுக்கு ஓட்டுப் போடச் சொல்லி பெற்றோரிடம் அடம் பிடியுங்கள்” என்று நீங்கள் மறைமுகமாக குழந்தைகளை குறி வைத்ததன் நீட்சி தான், இன்று உங்கள் கட்சிக்காரர்கள் அதே குழந்தைகளை நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
உங்கள் பதவி வெறிக்காக படிக்கும் பிள்ளைகளை இப்படி பரப்புரையாளர்களாக உபயோகப்படுத்துவது அருவருக்கத்தக்க அரசியல் உத்தி.
தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளை உபயோகித்தால் சிறைத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும், குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் (2016 திருத்தம்)- ன் படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தவெக கட்சிக்காரர்கள் மற்றும் அதை அனுமதித்த முதல்வர் விஜய் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.