ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்து, தமிழக அரசின் செயல்பாடுகள், அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து மனு அளித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். உடன் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
சென்னை: அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை நியமிக்க ரூ.50 லட்சம் வரை அமைச்சர் நிர்மல் குமார் லஞ்சம் கேட்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்து மனு அளித்தார். அதில், “கடந்த 21-ம் தேதி மதுரையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் முறையற்ற வகையில் நடந்து கொண்டதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நிறைவடையும்வரை அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்.
கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், எவ்வித அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் 151 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள், 80-க்கும்மேற்பட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் நடந்துள்ளன. எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கொடுக்கும் தவெக அரசு,இத்தனை குற்றச் சம்பவங்கள் நடந்தும் இதுவரை என்ன அறிக்கை அளித்துள்ளது? குதிரை பேரம் மூலமாகவே இந்த ஆட்சி அமைந்திருக்கிறது.
சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு சட்டம் தெரியுமா என்ற சந்தேகம் எழுகிறது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றமே உத்தரவிட்டும், அதைத் தடுப்பது அமைச்சராக இருக்க அவருக்குத் தகுதியில்லை என்பதை காட்டுகிறது. மேலும், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை நியமிக்க ரூ.5 லட்சம் முதல் 50 லட்சம் வரை அவர் லஞ்சம் கேட்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 167-ன் படி, மத்திய அரசின் பணிகளை ஆய்வு செய்யவும், மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.