திருச்சி / மதுரை: ஓய்வூதியம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு திமுகவின் ஏமாற்று வேலை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 2021 தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சி முடியும் நேரத்தில் அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இந்த அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? ஆட்சி தொடராது என்று தெரிந்தும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, திமுகவின் வாடிக்கையான ஏமாற்று வேலை. இவ்வாறு அவர் கூறினார்.
பலன்கள் கிடையாது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் மதுரையில் நேற்று கூறியதாவது: தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் பெயர் அறிவிப்பில் கவர்ச்சி இருக்கிறது. ஆனால், எந்தப் பலன்களும் இல்லை. இத்திட்டத்தை நிபந்தனையின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 4 லட்சம் பணியாளர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள், அவுட்சோர்சிங் பணியாளர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேச மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும்போது, 11% வளர்ச்சியடைந்த தமிழகத்தில் அமல்படுத்த முடியாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.
ஏமாற்று வேலை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாறாக, தேர்தலை மனதில்கொண்டு, அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.